
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில், 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திராவிட இயக்க வரலாற்றில் பெண்களின் பங்கு மற்றும் தமிழக அரசின் மகளிர் நலத்திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
"கேரளாவின் வைக்கத்தில் 101 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் போராடினார். அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியவர் பெரியாரின் தாயார். மிக முக்கியமாக, ஈ.வெ.ராமசாமி அவர்களுக்கு 'பெரியார்' என்ற பட்டத்தை வழங்கியதே பெண்கள் தான். அந்த அளவுக்குத் திராவிட இயக்கத்திற்காகப் பெண்கள் உழைத்துள்ளனர்," என்று குறிப்பிட்டார்.
"அமித்ஷா அவர்கள் அடுத்து தமிழ்நாடு தான் எங்கள் டார்கெட் என்கிறார். ஆனால், சுயமரியாதை உள்ள இந்தப் பெண்கள் கூட்டம் இருக்கும் வரை உங்களால் தமிழ்நாட்டுக்குள் நுழையவே முடியாது. தமிழ்நாட்டின் அமைதியைக் குலைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அமித்ஷாவின் பாட்சா தமிழ்நாட்டில் பலிக்காது," எனச் சாடினார்.
மகளிர் விடியல் பயணம், காலை உணவுத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (ரூ.1,000) போன்ற திட்டங்களால் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். விரைவில் 'மகளிர் 2.0' திட்டத்தின் மூலம் இன்னும் பல புதிய திட்டங்கள் வரும் என்றும் உறுதியளித்தார்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பேட்டி ஒன்றில், "இதே கேள்வியை ஸ்டாலினிடம் கேட்க முடியுமா?" என்று கேட்டதைச் சுட்டிக்காட்டி, "காஷ்மீர் வரை தமிழ்நாட்டின் குரல் எதிரொலிக்கிறது" என்றார்.
2026 சட்டசபை தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் எனவும், 200 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டும் எனவும் துணை முதல்வர் உதயநிதி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், செந்தில் பாலாஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.