
காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்றும் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று , டெங்கு இருக்கிறதா என பரிசோதனை செய்து கொண்டு, உரிய சிகிச்சை பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெரும்பாலான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் மரணத்தை தழுவி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கனோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலால் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை புதுப்போட்டை பகுதியில் அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், காய்ச்சல் வந்தால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என தெரிவித்தார்.
உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்து டெங்கு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
அரசு மருத்துமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அங்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.