விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது எங்களுக்கு சேரவேண்ய நிதியை வழங்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டில் மத்திய பாஜக அரசு பாகுபாடு காட்டுவதாக தமிழக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் கேரளாவும் இதே கோரிக்கையை முன்வைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளன.
இதன் ஒரு பகுதியாக கேரளா அரசு இன்று மாநில அமைச்சர்களோடு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தங்கள் மாநிலத்திற்கான நிதியை முறையாக பங்கிட்டு வழங்குங்கள் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் திமுகவினர் ஆங்காங்கே தமிழகத்திற்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றுவதாகக் கூறி பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் அல்வா விநியோகம் செய்து மத்திய அரசின் பாகுபாட்டை எடுத்து கூறினர்.
undefined
இந்நிலையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு ரூ.6 லட்சம் கோடி வரி கொடுத்துள்ள போதும், ரூ.1.58 லட்சம் கோடியை மட்டுமே வரிப்பகிர்வாக ஒன்றிய அரசு திருப்பிக் கொடுத்துள்ளது.
ஆனால், ரூ.3.41 லட்சம் கோடி வரி கட்டிய உத்தர பிரதேசத்துக்கு கிட்டத்தட்ட ரூ.7 லட்சம் கோடி வரிப்பகிர்வை வாரி வழங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியைக் கேட்டால் பதிலுக்கு மரியாதையை கேட்கிறார்கள். மாண்புமிகு, மரியாதைக்குரிய, பிரதமர் அவர்களே, ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே இப்போதாவது சொல்லுங்கள் நாங்கள் யாருடைய மரியாதைக்குரிய தகப்பனார் வீட்டு பணத்தை கேட்டோம்?
உங்கள் ஆட்சியின் கடைசி காலத்திலாவது, எங்களுக்கு நியாயமாக சேர வேண்டிய நிதிப்பகிர்வை தந்திடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.