அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன
தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி, நேற்றிரவு அவர் காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. செந்தில் பாலாஜி ஒமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், செந்தில் பாலாஜியின் இசிஜியில் மாறுதல்கள் இருப்பதாக கண்டறிந்தனர். மேலும், அவருக்கு செய்யப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் அவருக்கு இதயத்துக்கு செல்லும் முக்கிய மூன்று ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதாகவும் தெரியவந்தது. இதனால், அவருக்கு ரத்த அடைப்புகள் ஏற்படாமல் இருக்க மருந்துகள் கொடுக்கப்பட்டிருந்தன.
பொதுவாக அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் போது, அதற்கு முன்பு எவ்வித மருந்துகளும் எடுக்காமல் இருந்திருக்க வேண்டும். எனவே, தற்போது அந்த மருந்துகள் கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டு அவர் கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு அதற்கு பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வழக்கமான நடைமுறைதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு இருதயவியல் தலைவர் தலைமையிலான 5 பேர் கொண்ட மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது. தற்போது வரை அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்கு அவர் தயாராகி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செந்தில் பாலாஜி வழக்கிற்கு மருத்துவமனை அளிக்கும் அறிக்கைகள் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.