தனது மனைவி தாக்கப்பட்டதாக ராணுவ வீரர் பிரபாகரன் கதறி அழுத விவகாரத்தில் திடீர் திருப்பமாக ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் சதி திட்டம் திட்டியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடை வாடகை- மோதல்
காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் அவில்தாராக பணியாற்றி வருபவர் பிரபாகரன், இவர் கடந்த வாரம் சமூக வலை தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நிலப்பிரச்சனை தொடர்பாக தனது மனைவியை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரைநிர்வாணம் செய்து தாக்கியதாக கண்ணீரோடு புகார் தெரிவித்தார். தனது மனைவி உயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ராணுவ வீரரின் மனைவிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என திருவண்ணாமலை எஸ்பி தெரிவித்திருந்தார். இதனையடுத்து ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஹரிஹரன் மற்றும் செல்வராஜ் ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது பேன்சி கடை நடத்தி வந்த பிரபாகரன் மனைவியின் தந்தைக்கும், கடை உரிமையாளுக்கும் ஏற்பட்ட மோதல் என தெரியவந்தது. கடையை காலி செய்ய கடை உரிமையாளர் ராமு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி காலி செய்ய தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இந்தநிலையில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு மோதலில் முடிந்தது தெரியவந்தது. இதனையடுத்து தான் ராணுவ வீரர் தனது மனைவியை அரை நிர்வாணம் செய்து தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரச்சனையை பெரிது படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு ராணுவ வீரர் வீடியோ வெளியிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ராணுவ வீரர் தனது நண்பரிடம் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ராணுவ வீரர் விவகாரத்தில் திருப்பம்
இது தொடர்பாக ராணுவ வீரர் பிரபாகர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோவில், இந்த பிரச்சனைக்கா இறங்கி வேலை செஞ்சிருக்கேன், தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக் ஆக போகுது. போலீஸ் விசாரணையின் போது ஒன்னுக்கு இரண்டாக சொல்லுங்க, பாஜக, நாம் தமிழர் என அனைவருக்கும் பரப்பிவிட்டேன். இதுவரை எனது வீடியோவை 6 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். விசாரணையின் போது எனது மனைவியை அரை நிர்வாணம் செய்து அடித்தார்கள் என கூற வேண்டும். வீடியோ வெளியானதையடுத்து அமைச்சர்கள், முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள் என பலரும் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இந்த பிரச்சனையை நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும். கத்தியால் தாக்கியதாக கூற வேண்டாம். பிரச்சனையை மிகைப்படுத்தி விசாரணையில் கூறுங்கள்,
ராணுவ வீரருக்கு உதவியவர் கைது
கடை உரிமையாளர்களை காவல்துறை நன்றாக பார்த்துக்கொள்ளும். முக்கிய பார்ட்டி என்னிடம் நேரடியாகவே பேசியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். கடை உரிமையாளர் தரப்பை மொத்தமாக தூக்கிவிடுவார்கள் என ராணுவ வீரர் பிரபாகர் பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியான நிலையில் செல்போனில் பேசி, ராணுவ வீரர் பிரபாகரன் சதி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி, மைத்துனர்கள் உதயா, ஜீவா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ராணுவ வீரருடன் செல்போனில் பேசி சதித் திட்டம் தீட்டியதாக உறவினர் வினோதையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்