உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்த அரியலூர் திரும்பிய மாணவிக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இவரது மகள் சர்வாணிக்கா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சதுரங்க விளையாட்டின் மீது உள்ள அதிக ஆர்வத்தின் காரணமாக மாவட்ட மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து இவர் இரண்டு முறை தேசிய சதுரங்க போட்டியிலும் ஆசிய சதுரங்க போட்டியிலும் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் பெற்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்நிலையில் உலக சதுரங்க கழகத்தின் சார்பில் ஜார்ஜியா நாட்டில் 8 வயது முதல் 18 வயது உட்பட்டவர்களுக்கான உலக சதுரங்க சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, உஸ்பக்கிஸ்தான், இந்தியா, இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கடந்த 6ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் சர்வாணிக்கா 8 வயது உட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு விளையாடினார்.
மொத்தம் 11 சுற்றுகளில் 8 சுற்றுகளில் வெற்றி பெற்று உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். சாதனை படைத்த சிறுமி சர்வாணிக்கா குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலம் அரியலூர் ரயில் நிலையத்திற்கு தனது குடும்பத்தாருடன் வந்த சிறுமி சர்வாணிகாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்ட விளையாட்டு ஆசிரியர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறுமி சர்வாணிகாவிற்க்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
சிறுமி சர்வாணிகா, வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் சதுரங்க விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது