இந்து - இஸ்லாமியர் இடையேயான உறவுமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புத்தகம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் முதலமைச்சரின் அனுமதியுடன் வெளியிடப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வட சென்னையில் அறிவுசார் மையம்
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற வினாக்கள் விடைகள் நேரத்தில், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், மாதவரம் தொகுதியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னையில் ஏற்கனவே வண்ணாரப்பேட்டையில் தியாகராஜா கல்லூரி, நந்தனத்தில் கல்லூரியிலும் தலா ஒரு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், மதுரை, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களிலும் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார்.
வடசென்னை வளர்ச்சியில் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு உயர்ந்த அக்கறை கொண்டுள்ளதாக கூறிய அவர், சென்னை, மதுரை மட்டுமல்லாமல் கோவையிலும் திருச்சியிலும் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தது போல, எதிர்காலத்தில் வட சென்னையில் அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் எனவும் பதிலளித்தார்.
இந்து- முஸ்லிம் உறவுமுறை புத்தகம்
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், இந்து - இஸ்லாமியர் இடையே உள்ள உறவை ஒரு புத்தகமாக வெளியிட முடியுமா? என சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆண்டாண்டு காலமாக இந்து இஸ்லாமியர் நல்லுறவை வெளிப்படுத்தும் 20-க்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழகத்தில் உள்ளதாகவும், இவற்றில் எந்த நடைமுறையையும் தவிர்க்க நினைப்போரை வீழ்த்தும் சக்திதான் திராவிட மாடல் அரசு என கூறினார்.
மேலும், இந்து - இஸ்லாமியர்கள் சேர்ந்து வழிபடும் வழிபாட்டுக் கூடங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், புதுக்கோட்டையில் இஸ்லாமியர்கள் வடம் தொட்ட பிறகுதான் தேரோட்டம் நடைபெறும் வகையில் கோயில்கள் உள்ளதாகவும், பல இந்து கோயலில் இஸ்லாமியர்களை காவல் தெய்வமாக வழிபடுகின்றனர் என்றும், இந்து - இஸ்லாமியர் இடையேயான உறவுமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் புத்தகம் இந்து சமய அறநிலையத்துறை மூலம் முதலமைச்சரின் அனுமதியுடன் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.