சங்கரய்யாவிற்கு கவுர டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்
சுதந்திரப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கவுர டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில், பட்டமளிப்பு விழாவின்போது, என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக சட்டத்தின்படி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அதிகாரம் ஆட்சிப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கவுரவ டாக்டர் பட்டம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும்.
எனவே, ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை தீர்மானங்களின் அடிப்படையில், என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க அனுமதி கோரும் கோப்பு, பல்கலைக்கழகத்தின் வேந்தரான ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. நவம்பர் 2ஆம் தேதி (நாளை) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ள நிலையில், இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சங்கரய்யாவிற்கு கவுர டாக்டர் பட்டம் வழங்க மறுத்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு: முதல்வர் ஸ்டாலின் தாக்கு!
இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “நாளை நடைபெற உள்ள மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை கவர்னர் ஏற்கவில்லை. கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அதிகாரம் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவுக்கு உள்ளது. சங்கரய்யா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். 9 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்திருக்கிறார். ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. 102 வயதில் வாழ்ந்து வரும் சுதந்திர போராட்ட வீரருக்கு ஏன் வழங்க மறுக்கிறார் என ஆளுநர் பதில் சொல்ல வேண்டும். சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் ஏன் கொடுக்க முடியாது என்ற காரணத்தை ஆளுநர் விளக்க முடியுமா.?” என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொய் சொல்வதையே செய்து வருகிறார் ஆளுநர். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் எவ்வளவு பொய் கூறினார் ஆளுநர். அரசு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடுவதுதான் ஆளுநரின் வேலை. தமிழ்நாடு அமைச்சரவை சொல்வதை, செய்ய வேண்டியது தான் ஆளுநர் வேலை. பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுகிறார். மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. வேண்டும் என்றால் தேர்தலில் நின்று வெற்றி பெற்று, நினைத்ததை செய்யுங்கள்.” என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.