மத்திய பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி, மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலருக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அரசு ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்கள் உங்கள் சாதனத்தை குறிவைக்கலாம்; உங்களது செல்பேசி தகவல்கள் திருடப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில் உள்ள மூன்று பேருக்கும் இதுபோன்ற எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, அதானியை தொட்டவுடன் இது நடக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அந்த செய்திகளை பெற்றவர்களையும், ஆப்பிள் நிறுவனத்தையும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாக 2019ஆம் ஆண்டில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போதைய ஆப்பிள் சர்ச்சை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மத்திய பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மத்திய பாஜக அரசுக்கு தோல்வி பயம் வந்துள்ளதால் செல்போன் ஒட்டுக்கேட்பு வேலையை கையில் எடுத்துள்ளது. தனக்கு எதிராக இதுவரை கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகளை ஒடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்திய பாஜக அரசு இப்போது செல்போன் ஒட்டு கேட்பதை கையில் எடுத்துள்ளது.” என்று குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை: நாளை ஆஜராகும் மஹுவா மொய்த்ரா!
மக்களாட்சி நீடிக்குமா, ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா என்ற சூழல் நாட்டில் தற்போது நிலவுவதாக குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், ஐந்து மாநில தேர்தல்களிலும் பாஜக தோல்வியை தழுவும் என்ற செய்தியே வருகிறது. இந்தியாவை காக்க 'இந்தியா' கூட்டணிக்கு நீங்கள் வெற்றியை தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பாஜக அரசுக்கு எதிராக எந்த கருத்தை சொன்னாலும் மிரட்டுகிறார்கள், அச்சுறுத்துகிறார்கள். இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது தெரிவித்தார்.