2011ஆம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் விடுதலை செய்யப்படுவதாக வேலூர் நீதிமன்றம் தீர்பு வழங்கியுள்ளது.
தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமரைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது லஞ்ச ஒழிப்புத் துறை தொடர்ந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து இருவரையும் விடுதலை செய்வதாக வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்வதாக நீதிபதி வசந்த லீலா தீர்ப்பு வழங்கியுள்ளார்.
2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
கர்நாடகாவில் ரேஷன் கடைகளில் அரிசிக்குப் பதில் பணம்!
முதலில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும், பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டபோது அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் நேரில் ஆஜராகி இருந்தார்கள். அதற்குப் பின் இருவரும் நேரில் ஆஜர் ஆவதற்கு விலக்கு பெற்று, விசாரணைக்கு நேரில் வராமல் இருந்தனர். நீதிபதி வசந்த லீலா அமர்வில் வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.
இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.36 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.