
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே உள்ள மேல்மணம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அவருடன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலரும் உடன் சென்றனர்.
அமைச்சர் தனது ஆய்வின்போது, விடுதியில் மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவின் தரத்தையும், ருசியையும் சிறிது சாப்பிட்டு சோதித்து பார்த்தார். பின்னர் சமையலறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு பெயருக்கு மட்டுமே மளிகை பொருட்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, மாணவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு அவர் சென்று பார்த்தபோது, விடுதி அறையில் ஒரு மாணவர் கூட இல்லை.
ஆனால், மாணவர்கள் தங்கியிருப்பது போன்று காட்டுவதற்கு சில உடைகள் காயப்போடப்பட்டிருந்தன. பின்னர், கழிவறை, குளியலறைக்கு சென்று அமைச்சர் பார்த்தார். அவை பல நாட்களாக உபயோகப்படுத்தப்படாமல் இருப்பது போல காட்சியளித்தன. இதனால், கூடுதல் ஆதிர்ச்சியடைந்த அமைச்சர் கயல்விழி, வருகை பதிவேட்டை ஆய்வு செய்தபோது, அதில் தினமும் 66 மாணவர்கள் விடுதியில் தங்கியிருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு சமைக்கப்படுவதாகவும் இருந்தது.
தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினை: அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு திட்டம்!
இதுகுறித்து அமைச்சர் கேள்வியெழுப்பிய போது, பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர். விடுதியில் தங்கியிருப்பதாக கூறப்படும் மாணவர்களின் பெற்றோரை செல்போன் மூலம் அழைத்து பேசியபோது, உண்மைக்கு புறம்பான தகவல்களையே அவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம், 66 மாணவர்கள் தங்கியிருப்பது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டுள்ளதும், அமைச்சரின் ஆய்வை அறிந்து உணவு சமைத்ததும் அம்பலமானது.
தொடர்ந்து, விடுதியில் உள்ள ஆய்வறிக்கையில் முறைகேடு குறித்து அமைச்சர் எழுதுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடுதியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதனால் மாணவர்களின் பெற்றோரிடம் பேசி, உடனே அவர்களை விடுதிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும், உணவு சரியாக இருந்தது எனவும் விடுதி நிர்வாகிகளை காப்பாற்றும் வகையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் எழுதினார். அமைச்சரின் இந்த செயல் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ், முறையாக விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிவிட்டு சென்றார்.
ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஆதி திராவிடர் விடுதிகளை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. ஆனால், அதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், மாணவர்களே இல்லாத அரசு விடுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு செய்ததும், விடுதி ஆய்வறிக்கையில் அதுபற்றி குறிப்பிடாததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.