
தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படுகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பைபர், விசைப்படகுகள் மூலம் ஆழ்கடல் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன் இனபெருக்க காலம் அமல்படுத்தப்படும். இதையொட்டி மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும்.
அப்போது, மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை தவிர்ப்பார்கள். கட்டுமரம் மூலம் குறிப்பிட்ட கடல் மைல் தூரம் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த காலங்களில் இருந்த மீன்பிடி தடை காலமான 45 நாட்கள், தற்போது 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, கடலுக்கு சென்று தொழில் செய்யாமல் உள்ள மீனவர்களுக்கான நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இதுகுறித்து அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கடலில் ஏற்படும் சீதோஷன நிலையால், மீன்களின் இனப் பெருக்கம் குறைந்துவிடும். அதனால், அவற்றை பாதுகாக்கவே அந்த காலங்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இதுபோன்ற காலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும் மீனவர்களுக்கு நிவாரண தொகை முன்பு ரூ.4000 வழங்கப்பட்டது. இதில், 61 நாட்களாக அதிகரித்ததால், ரூ.5 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம்.
இதன் தொகை 1 லட்சத்து 64 ஆயிரம் மீனவர்களுக்கு, அவர்களது வங்கி கணக்கில் சேர்க்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் இந்த தொகை வழங்கப்படும். கன்னியாகுமரி தவிர, மற்ற மாவட்டங்களில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும்.
சென்னை காசிமேட்டில் இருந்து எண்ணூர் துறைமுகம் செல்லும் ராட்சத குழாய் பதிக்கும திட்டத்தால், எண்ணெய் கசிவு ஏற்பட்டு, மீன்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.