
போக்குவரத்து ஊழியர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை துவங்கியது. இதில், உடன்பாடு ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும், 2.43 லட்சம் ஊழியர்களுக்கான, 12வது ஊதிய ஒப்பந்தம், 2016 ஆகஸ்ட் மாதம் முடிந்தது. அதற்கு முன், 13வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும்.
அப்போது ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், இந்த பேச்சு வார்த்தை தள்ளிப் போனது. தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்ததால், கடந்த மார்ச் 7ம் தேதி துவங்கிய பேச்சு வார்த்தை 6 கட்டமாக நடந்தது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து, கடந்த 14ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில், தற்காலிகமாக பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், 7ம் கட்ட ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்போது துவங்கியுள்ளது.
இந்த பேச்சு வார்த்தையில் 48 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. போராட்டம் நடத்தியபோது, மூத்த அமைச்சர்கள் நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்பட்டது. அதேபோல், இன்றைய ஊதிய ஒப்பந்த பேச்சிலும் உடன்பாடு ஏற்படும் என போக்குவரத்து ஊழியர்கள் கூறுகின்றனர்.