
ரேஷன் கடைகளில் பொருட்கள் தரமுடியாவிட்டால் பதவியை விட்டு விலகுங்கள்…. அமைச்சரை துரத்திய பெண்கள்…
ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வழங்க முடியாவிட்டால் ஏன் பதவியில் இருக்கிறீர்கள் என அமைச்சர் செல்லூர் ராஜுவை, நூற்றுக்கணக்கான பெண்கள் முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
சென்னை திருவொற்றியூர் சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அந்த ரேஷன்கடையை ஆய்வு செய்ய அமைச்சர் செல்லூர் ராஜு வந்தார். அப்போது அவரை ஏராளமான பெண்கள் முற்றுகையிட்டனர்.
கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடையில் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை எனவும், ஆனால் பொருட்களை வழங்கியதாக பதிவேடுகளில் கடை ஊழியர் பதிவு செய்துகொள்வதாகவும் புகார் அளித்தனர்.
ஆனால் அது குறித்து எந்தபதிலும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்ட அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள், சரமாரியாக கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.
அரிசி,பருப்பு வழங்க முடியாவிட்டால் ஏன் பதவியில் இருக்கிறீர்கள் என பெண்கள் கேள்வி கேட்டதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் உதவியுடன் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றார்.