
தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006 - 2011ம் ஆண்டு வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் ஐ.பெரியசாமியின் மனைவி சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதில் ஐ.பெரியசாமி உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம் திண்டுக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஐ.பெரியசாமி, செந்தில்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவரின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு கடந்த ஜனவரி 5ம் தேதி ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ்க்கு எதிரான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஐ. பெரியசாமி சொத்து குவிப்பு வழக்கின் 2 முக்கிய வழக்குகள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அவருக்கும் மட்டுமல்ல திமுக தலைமைக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.