தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமலேயே, பொதுமக்களுக்கான ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தும் எண்ணத்தில் ஒவ்வொரு மாவட்ட ஒன்றியங்களின் பொதுமேலாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக பால் முகவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆவின் பால் விலை உயர்வு
ஆவின் பால் விலை உயர்வு தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு வகையில் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆவின்பால் விற்பனை விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே ஆரஞ்சு நிற பாக்கெட்டில் பசும்பால் எனக் கூறி மக்களை ஏமாற்றி வந்த நிலையில்,
தற்போது அதனை நிறுத்தி விட்டு ஆவின் டிலைட் என்கிற பெயரிலேயே உற்பத்தி மற்றும் விற்பனையை மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை 200மிலி அளவுள்ள இந்த வகை பால் பாக்கெட்டுகள் 9.50க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் பால் முகவர்களுக்கு 9.18க்கு வழங்கப்பட்டு வந்த நிலையில்,
லிட்டருக்கு 2.50 ரூபாய் உயர்வு
நேற்று (15.11.2023) முதல் அதன் விற்பனை விலையை பாக்கெட்டிற்கு 50காசுகள் உயர்த்தி, 10.00ரூபாய் என்கிற விற்பனை விலையில், பால் முகவர்களுக்கு 9.66க்கு வழங்குவதாக ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதையும், 200மிலி பாலுக்கு 50காசுகள் வீதம் லிட்டருக்கு 2.50ரூபாய் நேரடியாக பொதுமக்கள் தலையில் விற்பனை விலையை உயர்த்தும் நெல்லை மாவட்ட ஆவின் நிர்வாகத்தின் மக்கள் விரோத சர்வாதிகார போக்கினை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 4.5% கொழுப்பு சத்து கொண்ட 22.00ரூபாய் விலையுள்ள ஆவின் நிலைப்படுத்தப்பட்ட (Standardized Milk) பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி விட்டு,
மறைமுகமாக விற்பனை விலை உயர்வு
அதற்கு பதிலாக அதே விற்பனை விலைக்கு (22.00ரூபாய்க்கு) 3.5% கொழுப்பு சத்துள்ள "ஆவின் டிலைட்" ஊதா நிற பால் பாக்கெட்டுகளை வழங்கி பால் விற்பனை விலையை லிட்டருக்கு மறைமுகமாக 8.00ரூபாய் உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து மதுரை, தேனி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 6.0% கொழுப்பு சத்துள்ள 30.00ரூபாய் விற்பனை விலை கொண்ட நிறைகொழுப்பு பாலான (Full Gream Milk) ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்தி விட்டு அதற்கு பதிலாக கிட்டத்தட்ட அதே நிறம் கொண்ட பால் பாக்கெட்டில், அதே விற்பனை விலைக்கு 1.5% கொழுப்பு சத்து குறைவான, 4.5%கொழுப்பு சத்து கொண்ட "ஆவின் கோல்டு" பாலினை இளஞ் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் சந்தைப்படுத்தி லிட்டருக்கு 12.00ரூபாய் மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்தியது ஆவின் நிர்வாகம்.
திரும்ப பெற வேண்டும்
தமிழகம் முழுவதும் ஆவினுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களுக்கான பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காமலேயே, பொதுமக்களுக்கான ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தும் எண்ணத்தில் ஒவ்வொரு மாவட்ட ஒன்றியங்களின் பொதுமேலாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்க, ஆவின் நிர்வாக இயக்குனரோ, பால்வளத்துறை அமைச்சரோ, தமிழக முதல்வரோ கண்டு கொள்ளாமலும், தடுக்காமலும் இருப்பதை காணும் போது இது போன்ற நேரடியான மற்றும் கொழுப்பு சத்து அளவை குறைத்து மறைமுகமான விற்பனை விலை உயர்வை தமிழக அரசே திட்டமிட்டு ஊக்கப்படுத்தி வருகிறதோ..? என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது என பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
ஆவின் பால்பாக்கெட் விலை திடீர் உயர்வு.. எவ்வளவு உயர்வு.? எந்த நிற பால் பாக்கெட்டிற்கு தெரியுமா.?