மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைகக்கான நீர் வரத்து 20 ஆயிரத்து 626 கன அடியாக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,644 கன அடியாக குறைந்தது. இரவு பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 20,626 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 900கன அடியிலிருந்து வினாடிக்கு 750 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சாணி பவுடர், எலி மருந்து விற்பனைக்கு விரைவில் தடை - அமைச்சர் சுப்பிரமணியன்
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.71 அடியிலிருந்து 119.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.51 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் ஓரிரு நாட்களில் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை நெருங்குவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியாளர்கள் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனிடையே சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று அதிகாலை நேரத்தில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.