
பொதுமக்களுக்கு வழங்கும் ஸ்மார்ட்கார்டில் குடும்ப தலைவர்களின் புகைப்படங்களுக்கு பதிலாக நடிகை காஜல், விநாயகர், செருப்பு படங்கள் வரிசையில் தற்போது, தேசிய கொடி படம் இடம் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகளின் குளறுபடி, பதிவேற்றுபவர்கள் அலட்சியம் ஆகியவற்றால், உண்மையான குடும்பத்தலைவர்களின் புகைப்படம் இடம் பெறுவதற்கு பதிலாக பலரின் புகைப்படம் வருவதாக குடும்பத்தலைவர்களும், பெண்களும் புலம்பி வருகின்றனர்.
தமிழகத்தில் ரேஷன்கார்டுக்கு பதிலாக ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. இதில்ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, சென்னையில் இருந்து ஸ்மார்ட்கார்டு அச்சடிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.
அவ்வாறு அச்சடித்து அனுப்பப்படும் ஸ்மார்ட்கார்டுகளில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக மக்கள் நாள்தோறும் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். குடும்பத்தலைவர் புகைப்படம் மாறுவது, முகவரி மாறுவது, குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் மாறுவது, விடுவது என ஏராளமான குளறுபடிகள் நடக்கின்றன.
இதனிடையே சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கமலாபுரம் கிராமம், ஆர்.சி. செட்டிபட்டி கோமாளிவட்டத்தில், ஒரு ரேஷன்கடையில், வழங்கப்பட்ட ஸ்மார்ட்கார்டில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்று இருந்தது.
அதேபோல், ஸ்மார்ட்கார்டில் குடும்ப தலைவரின் படத்துக்கு பதிலாக பிள்ளையார் மற்றும் செருப்பு படம் இருந்து.
இந்த நிலையில், அமைச்சர் காமராஜ் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, ஸ்மார்ட்கார்டில் நடைபெறும் குளறுபடிகளுக்கு தீர்வு காணப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால், அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசிய சில மணி நேரங்களிலேயே, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியைச் சேர்ந்த தயா சுல்தான் என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட்கார்டில் குடும்பத் தலைவரின் புகைப்படத்துக்கு பதிலாக தேசியக்கொடி அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.