தியாகிகள் ஓய்வூதியம் ரூ.11,000 ஆக உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சுதந்திர தின அறிவிப்பு

By SG Balan  |  First Published Aug 15, 2023, 5:50 PM IST

தமிழ்நாட்டில் தியாகிகள்  ஓய்வூதியத்தை ரூ.11 ஆயிரமாக உயர்த்துவதாக அறிவித்த முதல்வர் 195 இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இந்த ஓய்வூதியம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் மூவர்ணக் கோடியை ஏற்றி உரையாற்றினார். அதுபோல தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்.

இந்த விழாவில் வைத்து பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் மற்றும் பதக்கங்களையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Tap to resize

Latest Videos

பின்னர் சிறப்புரை ஆற்றிய முதல்வர், தமிழ்நாட்டில் இருந்து இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாக உயர்த்துவதாக அறிவித்தார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதம் தோறும் இந்த ஓய்வூதியம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.

"பட்டொளி வீசிப் பறக்கும் மூவண்ணக் கொடிக்கு முதல் வணக்கம்! அதன் நிழலில் வாழ்கின்ற நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வணக்கம்! 400 ஆண்டுகள் பழமையான இந்த புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன். இந்த கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!" என்று முதல்வர் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்திய விடுதலையின் 75-வது ஆண்டு விழாவைப் பெருவிழாவாக ஆண்டு முழுவதும் கொண்டாடினோம். அதற்கான நினைவுத்தான் நேப்பியர் பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ந் தேதியை 'மகாகவி நாள்' என அறிவித்தோம். அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பினைச் செய்தோம்." என்றார்.

வ.உ.சிதம்பரனார் பற்றிப் பேசிய முதல்வர், "செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டி தமிழன் வ.உ.சிதம்பரனாரைப் பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகளை வெளியிட்டோம். அவரது படைப்புகளைத் தொகுத்து பாடநூல் கழகத்தின் சார்பில் வெளியிட்டுள்ளோம். அதுமட்டுமல்ல, அவர் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிக்குளத்தில் இயங்கி வரும் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்" எனக் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் 3D பேச்சு! சுதந்திர தின உரையை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!

பாப்பனம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கும் விதர்சன் என்ற மாணவன், முதலமைச்சர் சுதந்திர தின விழாவில் கொடி ஏற்றுவதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தான். அந்தச் சிறுவனின் ஆசையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி… pic.twitter.com/NYap9NO4wd

— CMOTamilNadu (@CMOTamilnadu)

"இந்த வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, இந்த ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பனை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க தலா 15 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டதையும் இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன். உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீடு சீரமைக்கப்பட்டது. கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலை அமைக்கப்பட்டது. கிண்டியில் மருது சகோதரர்கள் சிலை அமைக்கப்பட்டு உள்ளது." எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தியாகிகள் ஓய்வூதியம் பற்றி பேசிய முதல்வர், "இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 195 பேருக்கு மாதம் தோறும் தியாகிகளுக்கான நிதி கொடையை தொடர்ந்து வழங்கி வருகிறது தமிழக அரசு. கடந்த ஆண்டு தியாகிகளுக்கான ஓய்வூதியம் 18 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் குடும்ப ஓய்வூதியம் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதேபோல் விடுதலைப் போராட்ட வீரர்களின் வழித் தோன்றல்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்து வருகிறது நமது அரசு" என்றார்.

மேலும், "விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும் என்ற புதிய அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என அறிவித்தார்.

நாங்களும் கொண்டாட்டத்தில் இணைகிறோம்! இந்தியாவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து

click me!