மணிப்பூரில் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய அளவில் கலவரம் நடந்து வருகிறது. இதில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்தும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும், பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கிழக்கு பதிப்பக உரிமையாளரும், பிரபல எழுத்தாளருமான பத்ரி சேஷாத்திரி, பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிறந்தவரான பத்ரி சேஷாத்திரி, தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஒரு மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில், பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கும் திரு. அண்ணாமலை அவர்கள் ஒரு பதிவினை போட்டுள்ளார்.
அதில் "சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று, கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு", என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் "ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை, செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பத்ரி சேஷாத்திரி பேசியது என்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..
ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பத்ரி சேஷாத்ரி பின்வருமாறு பேசினார்.. "முதலில் நாம் பல விஷயங்கள் கோர்ட்டுக்கு செல்லாமல் தடுக்க வேண்டும், இது போன்ற விஷயங்களில் நீதிமன்றங்கள் தான் அறிவில்லாத தனமாக நடந்து கொண்டுள்ளது. அங்கு இரு பிரிவினரிடையே பிரச்சனை நடக்கிறது, ஆனால் அந்த பிரிவினர்களை பற்றி கொஞ்சமாவது நீதிபதிகளுக்கு தெரியுமா?".
"அங்கு நடத்தப்பட்ட வன்முறையில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நடக்கவே இல்லை என்று கூறவில்லை, ஆனால் அங்கு ராணுவம் தலையிட்டு எதாவது பிரச்னையானால் உடனே தமிழ்நாட்டில் உள்ள கவிஞர்கள், குறிப்பாக பெண் கவிஞர்கள் கவிதை எழுத துவங்கி விடுகிறார்கள்". "அதே போல ராணுவம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் உடனே குறை கூறுகின்றார்கள்".
"மேலும் தமிழர்களைப் போல அங்கு நடக்கும் விஷயத்தை புரிந்து கொள்ளாமல் பொறுக்கித்தனம் செய்யும் பிறரை நம்மால் பார்க்க முடியாது" என்று மிகக் கடுமையாக அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் அவர் நீதிமன்றத்தை அவமதித்ததை மேற்கோள் காட்டி தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.