
மகாராஷ்டிரா மாநிலம் தானேவின் ஷாஹாபூரி என்ற இடத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி அதிவிரைவுச் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ராட்சத கிரேன் ஒன்று உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்ருத்தி விரைவு நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட கட்டுமானத்தின் போது, பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துள்ளான பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
“அதிகாலை 1:30 மணியளவில் சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது, எங்களின் முதல் குழு அதிகாலை 5:30 மணியளவில் மீட்பு பணியைத் தொடங்கியது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன.” என தேசிய பேரிடர் மீட்புப் படை உதவி கமாண்டன்ட் சாரங் குர்வே தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவை கலக்கிய சசிகாந்த் செந்தில்: அடுத்த டார்கெட் ராஜஸ்தான்!
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில கிரேன் விபத்தில் சிக்கி உயிரிழந்த 17 பேரில் இரண்டு பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் (35), திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களது உடல் விமானம் மூலம் தமிழ்நாடு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, இந்த விபத்தில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி, பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.