மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சூரிய கிரகணமன்று மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தீபாவளிக்கு அடுத்த நாள் அக்டோபர் 25-ந் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு நடை சாத்தப்படுகிறது. அதனால் அன்று பக்தர்கள் இரவு 7 மணிக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
சூரிய கிரகணமானது அக்டோபர் 25-ந் தேதி செவ்வாய்க்கிழமையன்று காலை 5.11 மணி முதல் மாலை 6.27 மணிவரை நிகழும். இதனையொட்டி, திருப்பதி எழுமலையான் உள்ளிட முக்கிய கோவில்கள் மூடப்படுகிறது. திருப்பதியில் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணிவரை மூடப்படும் என்று ஏற்கனவே தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி , அன்று விஜபி, சிறப்பு கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதரிசன பக்தர்களுக்கு மட்டும் இரவு 7.30 மணிக்கு மேல் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிரகண நாளில் சமைப்பதில்லை என்பதால் அன்னதானமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சூரிய கிரகண நாளில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் மூடப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அக்டோபர் 25-ந் தேதி - செவ்வாய் கிழமை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணமானது மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 6.23 மணிக்கு முடிவடைகிறது. அன்றைய தினம் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை அம்மன் சுவாமி மூலஸ்தானத்தில் நடை சாத்தப்படும்
மேலும் படிக்க:ரேஷன் அரிசி விவகாரம்.. கட்சிக்காரர் சொன்னதை அப்படியே பேசிவிட்டார் அமைச்சர்.. தமிழக அரசு பதிலடி
சூரிய கிரகண நாளில் மதுரை மீனாட்சி அம்மன் சுவாமி மூலஸ்தான நடை சாத்தப்படுவதால் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை. சூரிய கிரகணத்தன்று மத்திம காலத்தில் மாலை 5.51 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு, அம்மன், சுவாமிக்கு கிரகண கால அபிஷேகம் நடைபெறும்
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கிரகண கால அபிஷேகம் முடிவடைந்து சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும். அன்றைய தினம் அதாவது சூரிய கிரகணம் நிகழும் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். மேலும், கோலாட்ட உற்சவம், சாமி புறப்பாடு அன்று ஒரு நாள் மட்டும் இரவு 7 மணிக்குப்பின் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:சட்ட பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறுகிறது தெரியுமா..?அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவு