
Senior Communist leader Nallakannu's health condition : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, தமிழ்நாட்டின் மிகவும் மதிக்கப்படும் அரசியல் தலைவர்களில் ஒருவர். 100 வயது தாண்டியும் சமூகநீதி, விவசாயிகள் உரிமைகள் மற்றும் சாதி ஒடுக்குமுறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர். சுதந்திர போராட்டப் பங்களிப்பு, விவசாயிகள் இயக்கம், சாதி-மத ஒற்றுமைக்கான போராட்டங்கள்,
தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் போன்றவற்றை அங்கீகரிக்கும் வகையில் நல்லகண்ணுவிற்கு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதும் கொடுத்து கவுரவிக்கப்பட்டது. 100 வயது தாண்டிய நல்லகண்ணுவிற்கு பிறந்தநாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 22 அன்று வீட்டில் விழுந்து நல்லகண்ணுவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் அங்கிருந்து ஆகஸ்ட் 25 அன்று சுவாசச் சிரமத்தால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் சிறப்பு ICU-ல் அனுமதிக்கப்பட்டார். அப்போது நல்லகண்ணுவின் உடல் நிலையானது முன்னேற்றம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. 2-3 நாட்களில் வீடு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வயது மூப்பு காரணமாக மீண்டும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் உடல் நிலை முன்னேறிய நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது, அப்போது நல்லகண்ணு தன்னுடைய உறவினர்களை அடையாளம் காணக்கூடிய நிலையில் இருந்தார்.
இந்த நிலையில் நல்லகண்ணுவிற்கு மீண்டும் அவர் உணவுக் குழாயில் அடைப்பு காரணமாக மூச்சு பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மீண்டும் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை குறித்து மக்களிடம் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்க தனி மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் கூறினார்.