மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் 3.17 கோடி, மற்றவர்கள் 8,467 என மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேரும், 80 வயதுக்கு மேல் 6,14,002 லட்சம் பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆண் வேட்பாளர்கள் 874, பெண் வேட்பாளர்கள் 76 பேர் என மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலை பாதுகாப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. மேலும், 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அத்துடன், பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி எளிமையாகவும், வசதியாகவும் வாக்களிக்கும் பொருட்டு பல்வேறு வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் வீட்டை முற்றுகையிட்ட விசிகவினர்!
அந்த வகையில், மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறியிருப்பதாவது, “வாக்காளர்களின் வசதிக்காக. மக்களவை தேர்தல்கள் 2024-க்காக வாக்குச்சாவடியின் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை தேர்தல்கள் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ இணைப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.