மக்களவைத் தேர்தல் 2024இல் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணி அப்படியே தொடர்கிறது, ஆனால், பாஜகவும், அதிமுகவும் பிரிந்துள்ளதால், இந்த கட்சிகளின் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வட மாவட்டங்களில் கணிசமாக வாக்கு வங்கி வைத்திருக்கும் பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சியில் இறங்கின.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இரு கட்சிகளுமே பாமகவின் கோரிக்கையான ராஜ்யசபா சீட் வழங்க ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் இழுபறி நீடித்து வந்தது. அதேசமயம், அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என ராமதாசும், பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என அன்புமணி ராமதாசும் விருப்பம் காட்டி வந்தனர். அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இறுதியாக நேற்று முன் தினம் மாலை பாஜகவுடன் பாமக கூட்டணியை உறுதி செய்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 சீட்: எந்தெந்த தொகுதிகள்?
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024இல் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தருமபுரி, கடலூர், விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி), ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புத்தூர், சேலம், மத்திய சென்னை, தென்மாவட்டத்தில் ஒரு தொகுதி என 10 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. இதில், தென்மாவட்டத்தில் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்படும் என தெரிகிறது.
அதேபோல், தருமபுரியில் மருத்துவர் செந்தில், சேலத்தில் சவுமியா அன்புமணி, விழுப்புரத்தில் வடிவேல ராவணன், மயிலாடுதுறையில் ஸ்டாலின், கடலூரில் வழக்கறிஞர் பாலு, சிதம்பரத்தில் சங்கர், திண்டுக்கல் தொகுதியில் பாமக மாநில பொருளாளரான திலகபாமா உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.