அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. தேர்தல் அறிக்கையையும், வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதிமுகவும் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி இன்று காலை அறிவித்தார்.
இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளட்ர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி என்பது ராசியான கூட்டணி. இந்த கூட்டணி 2026 தேர்தலிலும் தொடரும். எண்ணிக்கை என்பது முக்கியமல்ல; யார் யார் கூட்டணியில் சேர்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்றார்.
முன்னதாக, மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். எனவே, விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என தெரிகிறது.