பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஏமாற்றமா? ஜி.கே.வாசன் கேட்ட இடங்களை தட்டிச் சென்ற டிடிவி தினகரன்!

By Manikanda PrabuFirst Published Mar 20, 2024, 5:15 PM IST
Highlights

பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. தேர்தல் அறிக்கையையும், வேட்பாளர்கள் பட்டியலையும் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதிமுகவும் கிட்டத்தட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சரத்குமார், ஏசிஎஸ், ஓபிஎஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுடன் பாஜக தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. அந்த வகையில், பாமகவுக்கு 10 தொகுதிகளும் 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமாகா 4 தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால், 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க பாஜக முன்வந்துள்ளதால் இழுபறி நிலவுவதாக தெரிகிறது.

பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. தமாகா கேட்ட மயிலாடுதுறை தொகுதி பாமகவிற்கும், தஞ்சாவூர் தொகுதி அமமுகவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், புதிய தொகுதி கண்டறியவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது ஈரோடு தொகுதியை மட்டுமே தமாகாவுக்கு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக - அமமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து!

பாஜகவுடன் முதல் ஆளாக சென்று கூட்டணி அமைத்தவர் ஜி.கே.வாசன். மேலும், பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை கொண்டு வந்து சேர்த்ததிலும் வாசனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், அவருடனான தொகுதி ஒப்பந்த பேச்சுவார்த்தையிலேயே இழுபறி நீடித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு தொகுதியில் இந்த முறை திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் என்பவரும், திமுக சார்பில் பிரகாஷ் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகுதியில் தமாகா சார்பாக அக்கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா, முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் ஆகியோர் பெயர் பரிசீலனையில் இருந்தது. ஆனால், அவர்கள் இருவரும் போட்டியிட விரும்பவில்லை என தெரிகிறது. இதனால், அக்கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் விஜயகுமாரை வேட்பாளராக  அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

click me!