பாஜக - அமமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து!

By Manikanda PrabuFirst Published Mar 20, 2024, 4:37 PM IST
Highlights

பாஜக - அமமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீட்டை அரசியல் கட்சிகள் கிட்டத்தட்ட முடித்து விட்டன. தொகுதி பங்கீட்டை முடித்துள்ள திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

அதேபோல், அதிமுகவும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. இதனால், பாஜக தனது தலைமையில் தனியாக ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. பாஜக கூட்டணியில் சரத்குமார், ஏசிஎஸ், ஓபிஎஸ், ஜான் பாண்டியன் கட்சி, ஐஜேகே, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் உள்ளன.  இந்த கட்சிகளுடன் பாஜக தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது.

அந்த வகையில், பாமகவுக்கு 10 தொகுதிகளும் 1 மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக - அமமுக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், பாஜக கூட்டணியில் தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எந்தெந்த தொகுதி என்பது குறித்து அண்ணாமலை அறிவிப்பார். நாங்கள் கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார். 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவி வருவதாக தகவக்கள் வெளியாகியுள்ளன. தமாகா 4 தொகுதிகள் கேட்பதாகவும், ஆனால், 2 தொகுதிகள் மட்டுமே கொடுக்க பாஜக முன்வந்துள்ளதால் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது.

click me!