நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி (இன்று) தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அனைத்து பகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
தமிழகம் (39), ராஜஸ்தான் (12), உத்தரப் பிரதேசம் (8), மத்தியப் பிரதேசம் (6), உத்தராகண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் அண்ட் நிகோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), அசாம் (5), மகராஷ்டிரா (5), பிஹார் (4), மேற்குவங்கம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), ஜம்மு காஷ்மீர் (1), சத்தீஸ்கர் (1) தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மற்ற அனைத்துக் கட்டங்களையும் விட முதற்கட்டத்தில் அதிகப்பட்சமாக தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குரிமை கிடைக்காததால் கண்ணீர் விட்டு அழுத கோவை மூதாட்டி!
தமிழகத்தை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலுக்காக மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண் வாக்காளர்கள் 3.06 கோடி, பெண் வாக்காளர்கள் 3.17 கோடி, மற்றவர்கள் 8,467 என மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். .32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆண் வேட்பாளர்கள் 874, பெண் வேட்பாளர்கள் 76 பேர் என மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலை பாதுகாப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. மேலும், 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது வாக்கினை செலுத்தினர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. மாலை 6 மணிக்கு முன்பு வந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாநிலம் முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 67.52 சதவீதமும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 57.04 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.