மக்களவைத் தேர்தல் 2024: திருச்சி தொகுதி - கள நிலவரம் என்ன?

By Manikanda PrabuFirst Published Mar 25, 2024, 6:09 PM IST
Highlights

மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதியின் கள நிலவரம் என்ன?
 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகள் தலைமையில் தனித்தனியாக கூட்டணி அமைக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பெரிதும் டிமாண்ட்டாக இருந்த திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கூட்டணி கட்சியான மதிமுகவின் துரை வைகோ, பாஜக சார்பாக கூட்டணி கட்சியான அமமுகவின் செந்தில்நாதன், அதிமுக சார்பாக கருப்பையா பண்ணீர்செல்வம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு இந்த முறை திருச்சியில் சீட் கிடையாது என தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அந்த தகவலுக்கு திருநாவுக்கரசர் மறுப்பு  தெரிவித்திருந்தார்.

இறுதியாக, நாம் பலமுறை குறிப்ப்பிட்டதுய் போல, திருச்சி தொகுதி திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுகவுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் 4 தொகுதிகளும், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய இரண்டு தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் வருகின்றன.

திருச்சி தொகுதியில் காங்கிரஸ் கட்சியே கோலோச்சி வந்துள்ளது. அதேபோல், 4 முறை கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 முறையும், திமுக, மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறையும் திருச்சியில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவும் போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 59.70 சதவீத வாக்குகள் பெற்றது. 4,59,286 வாக்குகள் பெற்று மிகப்பெரிய வித்தியாசத்தில் திருநாவுக்கரசர் வெற்றி பெற்றார். அமமுக சார்பில் போட்டியிட்ட சாருபாலா தொண்டைமான் ஒரு லட்சம் வாக்குகள் வாங்கி 10 சதவீத வாக்குகளை பிரித்தார். நாம் தமிழர் கட்சி 7 சதவீதம் வாக்குகள் வாங்கியது.

அடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகவே வென்றது. அனைத்து தொகுதிகளையும் சேர்த்து 2,34,240 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. 2019 மக்களவைத் தேர்தலில் 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற திமுக கூட்டணி, 2021 சட்டமன்றத் தேர்தலில் 2,34,240 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. சிட்டிங் எம்.பி. திருநாவுக்கரசர் மீது அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது. இது திமுக கூட்டணிக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம், திருச்சி தொகுதியில் மதிமுகவுக்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் வெற்றி பெற்ற மதிமுக 63.68 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. வைகோவின் மகன், இரண்டு சிட்டிங் அமைச்சர்களை கொண்ட தொகுதி போன்றவை திமுகவுக்கு ப்ளஸாக பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் 2024: மதுரை தொகுதி - கள நிலவரம் என்ன?

திருச்சி தொகுதியில் கடந்த 2009, 2014 தேர்தல்களில் அதிமுகவின் ப.குமார் தொடர்ச்சியாக இரண்டு முறை வெற்றி பெற்றிருந்தார். தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுகவின் கருப்பையா பன்னீர்செல்வம், 39 வயது இளைஞர். இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறார். திருச்சியை திமுகவிடம் இருந்து மீட்க வேண்டும் என அதிமுகவினர் கடுமையாக முயற்சி வருவதாக கூறப்படுகிறது. இது அதிமுகவுக்கு ப்ளஸாக பார்க்கப்படுகிறது. ஆனால், சீனியர்களுக்கு சீட் இல்லாமல் இளைஞருக்கு சீட் கொடுத்திருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர் கருப்பையா. இதனால், உள்ளடி வேலைகள் நடக்க வாய்ப்புள்ளது போன்றவைகள் அதிமுக வேட்பாளருக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக சார்பாக செந்தில்நாதன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருச்சி 47ஆவது வார்டு கவுன்சிலராக அவர் உள்ளார். அமமுகவுக்கு திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமூக வாக்குகள் கணிசமாக உள்ளது. கடந்த தேர்தல் கொடுத்த நம்பிக்கையில் அடிப்படையில் டிடிவி தினகரன் திருச்சியை கேட்டு வாங்கியுள்ளதாக தெரிகிறது.

திருச்சி தொகுதியை பொறுத்தவரை அதிமுக vs மதிமுக என்றே கள நிலவரம் உள்ளது. இதில், திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.

click me!