
Leopard enters police station: நீலகிரி மாவட்டம் முழுவதும் வனங்களால் சூழப்பட்டது என்பதால் யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் புகுவதும், சில நேரங்களில் வீட்டுக்குள் புகுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், கடலூரில் காவல் நிலையத்துக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து ஜாலியாக வலம் வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
காவல் நிலையத்தில் சிறுத்தை
கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் என்ற ஊர் உள்ளது. நேற்று இரவு 8.30 மணி அளவில் நடுவட்டம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று பஜாரில் இருந்த காவல் நிலையத்துக்குள் புகுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு அதிகம் காவலர்கள் இல்லை. இதனால் ஹாயாக உள்ளே சென்ற சிறுத்தை நுழைவு வாயில் அறையில் வலம் வந்தது.
அந்த நேரத்தில் காவல் நிலையத்தின் மற்றொரு அறையில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ஒருவர் சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் சத்தம் போடாமல் அந்த அறையின் கதவை பூட்டிக்கொண்டு அமைதியாக இருந்தார். சிறிது நேரம் அறைக்குள் உலாவிய சிறுத்தை சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லை என உணர்ந்த பிறகு வந்த வழியாக வாசற்படிக்கட்டுகளில் இறங்கி வெளியே சென்றது.
சித்திரை மாதத்தில் நிலம் பதிவு செய்ய போறீங்களா.? பொதுமக்களுக்கு ஜாக்பாட்- தமிழக அரசு அதிரடி
பீதியில் உறைந்த போலீஸ் ஏட்டு
இதனைத் தொடர்ந்து வெளியே எட்டிப்பார்த்த போலீஸ் ஏட்டு, சிறுத்தை வெளியே சென்றதை உறுதி செய்த பிறகே அறையில் இருந்து வெளியே வந்தார். பின்பு காவல் நிலையத்தின் நுழைவு வாயிலை பூட்டிய பிறகே அவரால் நிம்மதியாக இருக்க முடிந்தது. பின்பு சிறுத்தை போலீஸ் நிலையத்துக்குள் வந்தது குறித்து போலீஸ் ஏட்டு உயர் அதிகாரிகளுக்கும், வனத்துறைனயினருக்கும் தகவல் தெரிவித்தார்.
சிறுத்தையின் வீடியோ வைரல்
அதன்பேரில் உடனடியாக அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை காவல் நிலையத்துக்குள் புகுந்து உலாவிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை வைத்து நெட்டிசன்கள் பலர் வேடிக்கையாக கமெண்ட் செய்தனர். ''இதுவரை வீட்டுக்குள் வந்த சிறுத்தை இப்போது காவல் நிலையத்துக்குளேயே வந்து விட்டதா? ஒருவேளை புகார் கொடுக்க வந்திருக்குமோ'' என்று கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
நடுவட்டம் பகுதியில் தொடர்ந்து சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பது பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது. காவல் நிலையத்துக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டை யாரும் சூறையாட முடியாது! முதல்வர் ஸ்டாலின் சூளுரை!