இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் சமூகநீதிக்கான வரலாறு தனித்துவமானது. நாட்டிலேயே வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ளது.
சமூக நீதிக்கான நூற்றாண்டு வரலாற்றை மீண்டும் ஒருமுறை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சமூக நீதியின் பிறப்பிடமாக இருந்த நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தே போது சமூகநீதிக்கான விதை போடப்பட்டது. ஆம். 1921-ம் ஆண்டிலேயே வகுப்புரிமை அரசாணை நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசு வேலைகளிலும், உயர் படிப்புகளிலும் உயர்சாதியினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அனைத்து சமூகத்தினரும் சமமான வாய்ப்புகளை பெறும் வகையில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது.
எனினும் இந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை உயர்சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பின்னர் 1928-ம் ஆண்டில் முதலமைச்சர் சுப்பராயனும், அமைச்சர் முத்தையா முதலியாரும் வகுப்புவாரி இடஒதுக்கீட்டை செயல்படுத்தினர். பின்னர் 1950-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை ரத்து செய்தது. ஆனால் இதற்கு தந்தை பெரியாரும், அண்ணாவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். #2YrsOfDravidianModel
ஒருபக்கம் பெரியார், மறுபக்கம் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் முயற்சியால் தமிழ்நாட்டின் மாணவர்கள் களத்தில் இறங்கினர். வகுப்புவாரி உரிமை என்று இந்தியாவின் தென் கோடியில் இருந்து உதித்த குரல் பிரதமர் நேருவின் மனசாட்சியை உலுக்கியது. தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமர் நேருவுக்கு கொண்டு சென்றதில் காமராஜரின் பங்கு அளப்பரியது. பின்னர் ஒருவழியாக 1951-ம் ஜூன் 2-ல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த சமூகநீதி குரலால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமூகநீதி கிடைத்தது.
பின்னர் கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31% ஆகவும், பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீடு 18 % ஆகவும் உயர்த்தப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பை கொண்டு வந்தார். இதனால், 1980 தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்தது. எனவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் வருமான வரம்பை நீக்கியதுடன் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தினார்.
1989-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர், அந்த 50% விழுக்காட்டில் 30% பிற்படுத்தப்பட்டோருக்கு என்று உருவாக்கினார். இந்தியாவிலேயே முதன்முறையாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கி, அப்பிரிவில் வரும் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்கினார். அதே போல் பட்டியலின் மக்களுக்கு 18% இட ஒதுக்கீடு, பழங்குடி இனத்தவருக்கு 1% இட ஒதுக்கீடு செய்தார். இதுதான் 69% இட ஒதுக்கீடு உருவான வரலாறு. #2YrsOfDravidianModel
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 1992-ல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு செல்லும் என்றும் அதன் அளவு 50 விழுக்காட்டை தாண்டக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் தமிழகத்தில் இருந்த 69% இட ஒதுக்கீட்டிற்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அப்போது 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க திமுக போராட்டங்களை நடத்தியது.
ஜெயலலிதா ஆட்சியில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 31-சி பிரிவின் படி சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டதன் விளைவாக 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சமூக நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம், நீதிமன்றத்தை திமுக நாடி வெற்றி பெறுவது அல்லது நீதிமன்ற தடையை தகர்க்கும் வகையில் அரசியல் சட்டப்பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற தொடர் முயற்சிகளால் தான் சமூக நீதி தொடர்ந்து நிலைநாட்டப்படுகிறது. #2YrsOfDravidianModel
திமுக எம்.பி வில்சன் முன்பு அளித்திருந்த பேட்டியில் கூட, ''இந்திய தேசத்தில் அனைத்து மக்களுக்கும் சமத்துவம், சம நீதி கிடைக்க வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டு இருக்கிறார். அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வர வேண்டும். அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் சட்டத்தில் இவை இருந்தாலும், மக்கள் மனதில் இன்னும் சமத்துவம் பிறக்கவில்லை. மக்கள் மனதில் இன்னும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.
மக்கள் மனதில் சமத்துவத்தை கொண்டு வர ஒவ்வொரு முறையும் போராட வேண்டி இருக்கிறது. 1980 களில் மண்டல் கமிஷன் அறிக்கை வந்தாலும் அதை அமலாக்க 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. மண்டல் கமிஷனை அமல்படுத்தவே நீண்ட நெடிய போராட்டம் நடத்தப்பட்டது. சமூகநீதி என்பது கீழ் மட்டத்தில் இருப்பவர்களை மேலே கொண்டு வருவது. அதுதான் எங்கள் கொள்கை. இதைத்தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான எங்களது அரசு வாய் அளவில் பேசாமல், செயல் அளவில் செய்து காட்டி வருகிறது''என்று தெரிவித்து இருந்தார். #2YrsOfDravidianModel