அதிர்ச்சி! கடந்தாண்டில் மட்டும் 200 பெண்களுக்கு கருக்கலைப்பு - தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு வலைவீச்சு...

First Published Feb 3, 2018, 9:16 AM IST
Highlights
Last year 200 women had abortion - private hospital doctor escape


திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கடந்தாண்டில் மட்டும் சுமார் 200 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள் பதிவேடுகளை ஆய்வு செய்ததில் கண்டுபிடித்தனர். மருத்துவர் தலைமறைவானதால் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி ஸ்கேன் சென்டர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா?, பெண்ணா? என்பதை அறிவிப்பதாகவும், பெண் சிசு என்றால் கருக்கலைப்பு செய்வதாகவும் மத்திய சுகாதாரத் துறைக்கு பரவலாக புகார்கள் வந்தன.

இதனையடுத்து மத்திய சுகாதார குழுவினர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

இதில் விதிகளை மீறி செயல்பட்ட திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள மூன்று தனியார் ஸ்கேன் சென்டர்களில் உள்ள அல்ட்ரா சௌண்டு கருவிகள் உள்ள அறைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

பின்னர், திருவூடல் தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கருக்கலைப்புக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்து, மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்த பதிவேடுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், கடந்தாண்டில் மட்டும் சுமார் 200 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து மருத்துவக் குழுவினர் அந்த மருத்துவமனையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். மருத்துவமனை மருத்துவர் மீது மத்திய சுகாதார கண்காணிப்பு குழு உறுப்பினர் மருத்துவர் சுதேஷ்ஜோஷி திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையறிந்த அம் மருத்துவமனையின் மருத்துவர் தலைமறைவாகிவிட்டார். அவர் மீது காவலாளர்கள் நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!