
கோவையை அடுத்த அன்னூரில் பெண் ஒருவரைக் கொன்று நகை, பணத்தைக் கொள்ளையடித்துக் சென்ற வட மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை தமிழக போலீசார் பூடான் எல்லைவரை விரட்டிச் சென்று துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஊஞ்சக்குட்டை பகுதியை சேர்ந்த விவசாயி மயில்சாமி என்பவர் தனது தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் டைல்ஸ், கிரானைட் கற்கள் பதிக்கும் பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாம்ராட் ,பிந்து அஜய் ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் 3 பேரும் தோட்டத்தில் ஒரு பகுதியில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி நள்ளிரவில் அவர்கள் 3 பேரும் மயில்சாமி வீட்டின் கதவை தட்டினார்கள். மயில்சாமி கதவை திறந்ததும், குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். மயில்சாமி கதவை திறந்து வைத்துவிட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற 3 பேரும் திடீரென்று மயில்சாமியின் தலையில் கட்டையால் தாக்கியதுடன், மின்சாரத்தை அவர் மீது பாய்ச்சி கொல்ல முயன்றனர்
சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி ராஜாமணியையும் அவர்கள் கட்டையால் தாக்கி, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர் அவர் அணிந்திருந்த 8 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
கொடூரமாக நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையர்களின் செல்போன் எண்களை வைத்து போலீசார் அவர்களை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றனர்.
முதலில் அவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்ததது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்ததது. இதையடுத்து அவர்களை நெருங்கிய போலீசாருக்கு டிமிக்கி கொடத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மீண்டும் அவர்கள் செல்போன் சிக்னல் மூலம் விடாது தமிழக போலீசார் துரத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து கொள்ளையர்கள் மூவரும் மேற்குவங்காள மாநிலம் பூடான் எல்லையில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் சினிமா காட்சி போல் குற்றவாளிகளை சுற்றிவளைத்த போலீசார், துப்பாக்கி முனையில் பிந்து, அஜய், சாம்ராட் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் இன்று விமானம் மூலம் கோவை கொண்டுவரப்படுகின்றனர்.
கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் தங்களுக்கு வேலை மற்றும் உணவளித்த மயில்சாமி மனைவியைக் கொன்ற கொள்ளையர்களை விரைந்து பிடித்த போலீசாரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.