
ஒரு இந்திய அரசியல்வாதியும், தற்போது நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநருமான இல கணேசன் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முன்னாள் தலைவர் மற்றும் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் முன்னர் மணிப்பூர் மாநில ஆளுநராகவும் (2021-2023) மற்றும் மேற்கு வங்கத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராகவும் (2022) பணியாற்றியுள்ளார். மேலும், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் (2016-2018) இருந்துள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை:
கடந்த 1945 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இலட்சுமி ராகவன் மற்றும் அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், அண்ணன்களின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம் கொண்ட இல கணேசன் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் (RSS) ஈடுபாடு காட்டத் தொடங்கினார். 16 வயதில் அரசு வேலையில் சேர்ந்தாலும், 1970-இல் திருமணம் செய்யாமல், வேலையை விட்டுவிட்டு RSS-இன் முழுநேரப் பிரச்சாரகராக ஆனார்.
அரசியல் பயணம்: RSS முதல் BJP வரை:
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் நாகர்கோவில், நெல்லை, மதுரை போன்ற பகுதிகளில் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். பின்னர் 1991-இல் BJP-யில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், மாநில அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
BJP பதவிகள்: BJP-யின் தமிழ்நாடு மாநில செயலாளர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தவர்.
தேர்தல் அனுபவம்:
2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் BJP வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016-இல் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆளுநர் பதவிகள்: 2021 ஆகஸ்டு 22-இல் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராகப் பணியாற்றினார். பின்னர், 2023 பிப்ரவரி 20 ஆம் தேதி நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இல. கணேசன் திருமணம் செய்யவில்லை என்றாலும் கூட அவர் தனது அண்ணன்கள் வீட்டில் தான் வளர்ந்து வந்துள்ளார். இறப்பதற்கு முன்பும் கூட அவர் சென்னையில் உள்ள அண்ணன்கள் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் பாத்ரூம் சென்ற போது கால் வழுக்கி கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சற்று நேரத்திற்கு முன்னதாக அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணனின் சதாபிஷேகம் விழாவை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார். அதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதே போன்று இல கணேசனின் 80ஆவது பிறந்தநாளையும் சதாபிஷேக விழாவாகவே கொண்டாடியிருக்கின்றனர். அதில் தமிழக முதல்வர் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டிருக்கிறார்.
உண்மையில் சதாபிஷேகம் என்பது திருமணமானவர்களுக்கு கொண்டாடப்படும் நிலையில், இல கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில், அவரது சதாபிஷேக விழாவை உறவினர்கள் பிறந்தநாள் விழாவாக கொண்டாடியிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.