
ஒரு இந்திய அரசியல்வாதியும், தற்போது நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநருமான இல கணேசன் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முன்னாள் தலைவர் மற்றும் மூத்த தலைவர்களில் ஒருவர். இவர் முன்னர் மணிப்பூர் மாநில ஆளுநராகவும் (2021-2023) மற்றும் மேற்கு வங்கத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராகவும் (2022) பணியாற்றியுள்ளார். மேலும், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் (2016-2018) இருந்துள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை:
கடந்த 1945 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் இலக்குமிராகவன் மற்றும் அலமேலு தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், அண்ணன்களின் அரவணைப்பில் வளர்ந்தார். சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம் கொண்ட இல கணேசன் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் (RSS) ஈடுபாடு காட்டத் தொடங்கினார். 16 வயதில் அரசு வேலையில் சேர்ந்தாலும், 1970-இல் திருமணம் செய்யாமல், வேலையை விட்டுவிட்டு RSS-இன் முழுநேரப் பிரச்சாரகராக ஆனார்.
அரசியல் பயணம்: RSS முதல் BJP வரை:
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தில் நாகர்கோவில், நெல்லை, மதுரை போன்ற பகுதிகளில் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். பின்னர் 1991-இல் BJP-யில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், மாநில அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
BJP பதவிகள்: BJP-யின் தமிழ்நாடு மாநில செயலாளர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தவர்.
தேர்தல் அனுபவம்: 2009 மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் BJP வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016-இல் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆளுநர் பதவிகள்: 2021 ஆகஸ்டு 22-இல் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராகப் பணியாற்றினார். பின்னர், 2023 பிப்ரவரி 20 ஆம் தேதி நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
தனிப்பட்ட வாழ்க்கை:இல. கணேசன் திருமணம் செய்யவில்லை என்றாலும் கூட அவர் தனது அண்ணன்கள் வீட்டில் தான் வளர்ந்து வந்துள்ளார். இப்போதும் கூட அவர் சென்னையில் உள்ள அண்ணன்கள் வீட்டில் இருந்த நிலையில் பாத்ரூம் சென்ற போது காலிடறி வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடல் நிலை மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கூ முன்பு தான் இல கணேசன் தனது 80ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் சதாபிஷேகத்தை கொண்டாடினார். அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.