
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, போலி சாதி சான்றிதழ் பெற்றுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக வருவாய் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு காரணமாக மருத்துவ துறையில் சேர முடியாத விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.
அனிதாவின் மரணத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர், அனிதாவின் குடும்பத்தாரிடம் நேரில் ஆறுதல் தெரிவித்தனர். மேலும், அனிதாவின் குடும்பத்துக்கு நிதியுதவியும் அளித்தனர்.
ஆனால், அனிதாவின் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி. இந்த நிலையில், டாக்டர் கிருஷ்ணசாமி, போலி சாதி சான்றிதழ் பெற்றுள்ளதாக கூறியும் அதனை ரத்து செய்யக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக சிவஜெயப்பிரகாஷ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில், டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதி சான்றிதழ் குறித்து தமிழக வருவாய் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை
உத்தரவிட்டுள்ளது.