தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விருப்பம் தெரிவித்துள்ளார். திருமாவளவனும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்.?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாத காலமே உள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் தற்போது வரை எந்த கட்சியில் இல்லாத நிலை நீடிக்கிறது. பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுகவுடன் இணையுமா.? அல்லது தனி அணியை உருவாக்குமா.? என்ற குழப்பம் உள்ளது. நடிகர் விஜய்யின் தவெக தனித்து போட்டியிடவுள்ளது. இதே போல நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் காணவுள்ளது.
ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியோடு கூட்டணி
எனவே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வருகிறது. இதே கருத்தை நடிகர் விஜய்யும் வலியுறுத்தியுள்ளார். தவெக மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணியாக தேர்தலை சந்திப்போம், ஆட்சியில் பங்கு கொடுப்போம் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். எனவே தவெக கூட்டணியில் புதிய தமிழகம் இணையுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாஞ்சோலை மக்களுக்கு பாதுகாப்பு
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட மக்கள் கடந்த 100 வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் வாழ்ந்து வரும் நிலையில் தற்போது புலிகள் காப்பகம் என்ற பெயரில் அவர்களை வெளியேற்றுவது நியாயம் இல்லை என கூறினார். எனவே அவர்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், விவசாய பட்ஜெட்டில் கரும்புக்கான உரிய விலையும் நிர்ணயிக்கப்படவில்லை, வேளாண் பொருட்களை சேமிப்பு வைப்பதற்கான குளிர்சாதன வசதிகளும் அதிக அளவில் ஏற்படுத்தப்படுத்துவதற்கான அறிவிப்புகள் இல்லையென தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு
மேலும் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சியில் எந்த கட்சி பங்கு கொடுக்கிறதோ அந்த கட்சியோடு கூட்டணி அமைப்போம் என கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் இதேகருத்தை தெரிவித்து வரும் நிலையில் அவரும் ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து ஓரணியில் தேர்தலை சந்திப்பதற்கு அதற்கான பணியில் ஈடுபட வேண்டும் என கிருஷ்ணசாமி கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.