
பாஜக மாநில ஓபிசி அணி செயலாளர் கே.ஆர்.வெங்கடேஷ்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ். இவர், தமிழக பாஜகவில் மாநில ஓபிசி அணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது ஆந்திரா, தெலங்கானாவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பணமோசடி உள்ளிட்ட 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன. செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திரா போலீசாரால் பல முறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதை அடுத்து ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் புகார்
இந்நிலையில் ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் பேனாசோனிக் டீலர் தீபன் சக்கரவர்த்தி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், பேனாசோனிக் கம்பெனியின் டீலராக உள்ளேன். ரூ.50 லட்சம் அளவுக்கு கணபதிலால் என்பவருக்கு பொருட்கள் சப்ளை செய்தேன். அந்த பணத்தை அவர் கொடுக்கவில்லை. அதேபோல, கணபதிலாலுக்கு கோகுல்தாஸ் என்பவரும் பொருட்கள் சப்ளை செய்துள்ளார். அதற்கும் பணம் வரவில்லை. இருவரும் சேர்ந்து ரவுடி வெங்கடேஷிடம் சென்று பணத்தை வாங்கித் தரும்படி கூறினோம். அதற்கு பணம் வாங்கித் தருகிறேன். தனக்கு 10 சதவீதம் கமிஷன் தரவேண்டும் என்றார்.
தொழிலதிபருக்கு மிரட்டல்
இதற்கு நாங்களும் சம்மதித்து முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தோம். ஆனால் அவர் பணத்தை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்தார். ஆனால் அவர் கணபதிலாலுடன் கூட்டுச் சேர்ந்து எங்களை மிரட்டி பணம் பறிக்க தொடங்கினார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த, புகாரின் பேரில் அடிப்படையில் பாஜக பிரமுகர் வெங்கடேஷ் போலீசார் நேற்று காலையில் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட கே.ஆர்.வெங்கடேஷ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
பாஜகவில் இருந்து நீக்கம்
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த K.R.வெங்கடேஷ் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார். கடந்த 7ம் தேதி மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை ஆந்திர காவல்துறை, தமிழக காவல்துறை, தெலங்கானா காவல்துறைக்கு டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.