
திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி காரில் மோதிய கணவன் மனைவி பலியானார்கள், தவறான பாதையில் வந்து தம்பதிகளின் இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்துக்கு காரணமான வாலிபர் தப்பி ஓடி விட்டார்.
திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி இன்று காலை மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார் , அப்போது, மேச்சேரியை அடுத்த சாத்தப்பாடி என்ற இடத்தில் வந்தபோது, எதிரில் ஓமலூர் அருகிலுள்ள கோட்டக்கவுண்டன்பட்டியை சேர்ந்த இராஜேந்திரன் (வயது-45) அவருடைய மனைவி விஜயா (வயது-40) இருவரும் மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தங்கள் மகளை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்.
அப்போது, மேட்டூர் செல்லும் சாலையின் இடது பக்கத்தில் இருந்து ஒரு இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர் ஒருவர் வேகமாக வந்து சாலையில் ஏறியுள்ளார். இதில் சாலையில் நேராக சென்று கொண்டிருந்த இராஜேந்திரன் தம்பதிகள் வந்த வண்டியில் மோதியதில் அவர்கள் அவர்கள் இருவரும் நிலை தடுமாறி சாலையின் வலது பக்கம் தூக்கி வீசப்பட்டனர்.
அப்போது, சாலையின் எதிர் புறத்தில் வந்த கொளத்தூர் மணி பயணம் செய்த காரின் முன் இருவரும் விழுந்ததில், அவர்கள் காரில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குறுக்காக வந்து மோதி விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அவர் ஓட்டிவந்த வண்டியை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடி விட்டார்.
இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை தேடி வருகின்றனர்.