
தாம்பரத்தில் 3-வது ரயில் முனையம் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்பட தொடங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னைக்கு வட மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் ரயில்களின் வசதிக்காக சென்ட்ரலில் ஒரு முனையமும்,
தமிழக பகுதிகளுக்கு அதிக அளவில் இயக்கப்படும் ரயில்களுக்காக எழும்பூரில் ஒரு முனையமும் தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கூடுதல் நெரிசலை சமாளிக்கவும் ரயில்கள் இயக்குவதற்கு வசதியாக தென் மாவட்டங்களுக்கு மூன்றாவது ரயில் முனையத்தை, தாம்பரத்தில் அமைக்க முடிவு செய்து ரயில்வே முனையம் அமைக்கும் பணி அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
தாம்பரத்தில் மூன்றாவது ரயில்வே முனையம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது ரயில் நிலையம் டிசம்பர் மாதம் முதல் செயல்பட தொடங்கும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.
தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி, இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சென்னை, சென்ட்ரல், சென்னை கடற்கரை சந்திப்பு போன்று தாம்பரத்தில் 3-வது ரயில் முனையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தாம்பரத்தில் அமைக்கப்படும் 3-வது ரயில் முனையம் வரும் டிசம்பர் மாதம் முதல் செயல்பட தொடங்கும் என்று வசிஷ்ட ஜோரி தெரிவித்தார்.