ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!

Published : Dec 08, 2025, 07:28 PM IST
kn nehru ed

சுருக்கம்

ரூ.1020 கோடி ஊழல் குற்றச்சாடு சுமத்தப்பட்ட நிலையில், அமலாக்கத்துறைக்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படியும் தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில், தன் துறையின் மீதான புகாரை சட்டப்படி எதிர்கொள்வேன். ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு கே.என்.நேரு கண்டனம்

இது தொடர்பாக கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்கட்சிகளின் வரிசையில் அமலாக்கத்துறையையும் சேர்ந்து கொண்டு அதை ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏவல் துறையாக்கி- நாளொரு புகாரும், பொழுதொரு பிரச்சாரமுமாக என்னைக் குறி வைத்து தொடர்ந்து அவதூறில் ஈடுபட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

எனது துறையின் சாதனை உறுத்துகிறது

கடந்த ஐந்து வருடங்களில் எனது துறையின் கீழ் 24 ஆயிரத்து 752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன. கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என இதுவரை 1762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படியாக எனது துறையின் திராவிட மாடல் வளர்ச்சி எதிர்கட்சிகளின் கண்ணை உறுத்துவதை விட அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது.

மழை, வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளோம்

இதுவரை 158 பேருந்து நிலையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஐந்தாண்டுகளில் மாற்றும் அளவிற்கு வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறோம். சென்னையில் வெள்ளம் ஏற்படாதபடி மக்களை மழை, வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளோம். இந்த சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத –சட்டமன்றத் தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக- பா.ஜ.க. கூட்டணி கட்சியினரின் தூக்கத்தை இந்த அரசின் சாதனைகள் கலைத்து விட்டன.

ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள்

பா.ஜ.க.வினரை இந்த சாதனைகள் ரொம்பவே மிரட்டுகிறது. ஒன்றிய நிதியை முடக்குகிறோம். ஆளுநரை வைத்து முட்டுக்கட்டை போடுகிறோம். ஏஜென்ஸிகளை விட்டு பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் சாதனைகள் செய்கிறார்களே என்ற எரிச்சல்! எனவே எத தின்னால் பித்தம் தெளியும் என திண்டாடுகிறார்கள். ஆகவே அமலாக்கத்துறை போன்ற ஏஜென்ஸிகளை ஏவி விடுகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்ய வேண்டிய அரசியல் பிரச்சாரத்தை அமலாக்கத்துறையையே வைத்து செய்கிறார்கள்.

எந்த குற்றமும் நடக்கவில்லை

தன்னாட்சி மிக்க அமைப்பு என உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை இன்று பா.ஜ.க.வின் துணை அமைப்பாக்கப்பட்டிருக்கிறது. என் சகோதரர் மீது 2013ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் "எந்த குற்றமும் நடக்கவில்லை" என ரத்து செய்து விட்டது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அழலாக்கத்துறையை மீண்டும் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபடச் சொல்லி ஒன்றிய பா.ஜ.க. அரசு நிர்பந்திக்கிறது என்றால் அவர்களுக்குப் பயம் நானல்ல! இந்த துறை செய்துள்ள சாதனைகள்!

அவதூறுப் பிரச்சாரத்திற்கு அஞ்சமாட்டோம்

எனது துறைக்குள் எங்கு நுழைந்து பார்த்தாலும் எங்கும் "சாதனை-சாதனை- சாதனை" என்றுதான் எதிரொலிக்கும். ஆனால் அதுவே ஒன்றிய பா.ஜ.க. அரசு தூண்டிவிடும் அமலாக்கத்துறையின் கண்களுக்கு ஆதாரமற்ற புகார்களாகத் தெரிகிறது! அப்பட்டமான அரசியல் செய்யத் தூண்டிவிடப்படுகிறது. மக்கள் போற்றும் எனது துறையின் சாதனைகளைப் பார்த்து வெதும்புவர்களுக்கு பதில் சொல்ல முடியாது. என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வேன். பா.ஜ.க. அரசின் தூண்டுதலில் அரசியல் பிரசாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ- அல்லது "அதிமுக- பா.ஜ.க. கூட்டணியினர் "பொய்யையும், புரட்டையும்" மட்டுமே மூலதனமாக வைத்து ஈடுபடும் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம்'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Schools Reopening: பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு! 3 நாட்கள் கூடுதல் விடுமுறை! மாணவர்கள் குஷி!
CBSE Language Policy : மும்மொழி கொள்கை மாணவர்களுக்கு கூடுதல் சுமை - அண்ணாமலை கடும் எதிர்ப்பு