தமிழக ஆளுநரை அவமதித்த மாணவிக்கு நீதிமன்றம் கொடுத்த ஷாக்..! பட்டம் ரத்து செய்யப்படுகிறதா?

Published : Dec 08, 2025, 04:42 PM IST
Tamilnadu

சுருக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த மாணவிக்கு உயர்நீதிமன்றம் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த மாணவி பட்டம் ரத்து செய்யப்படுகிறதா? என்பது குறித்து பார்க்கலாம்.

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வேந்தராக மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். மாணவ, மாணவிகள் ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற்று மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ஆளுநரின் பட்டம் பெற மறுத்த மாணவி

அப்போது நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்து அருகில் நின்ற பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பட்டத்தை பெற்றுச் சென்றார். ஆளுநர் ரவி சைகை காட்டியும் அந்த மாணவி அதை கண்டுகொள்ளாமல் துணைவேந்தரிடம் பட்டத்தை வாங்கிச் சென்றது ஆளுநர் ரவி உள்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட்டம் பெற மறுத்தது ஏன்?

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாணவி ஜீன் ஜோசப், ''ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் செய்தது என்ன? அவர் தமிழகத்தும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதால் அவரிடம் இருந்து பட்டம் பெற எனக்கு விருப்பம் இல்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு'' என்று தெரிவித்து இருந்தார்.

ஆதரவும், எதிர்ப்பும்

ஆளுநர் ரவியை மாணவி அவமதித்ததை திமுகவினரும், அதன் கூட்டணி கட்சியினரும் கொண்டாடினார்கள். அதே வேளையில் அந்த மாணவி திமுக பிரமுகரின் மனைவி என்பதும் ஆகையால் கணவருக்கு தேர்தலில் சீட் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஆளுநர் ரவியை அவமதித்து அனைவரின் கவனத்தை ஈர்த்ததாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

மாணவி பட்டத்தை ரத்து செய்ய வேண்டும்

இதற்கிடையே உயரிய பொறுப்பில் இருக்கும் ஆளுநர் ரவியை அவமதித்த மாணவி ஜீன் ஜோசப்பின் பட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ''பல்கலைக்கழகத்தின் தலைவர் வேந்தர் தான். ஆகவே மாணவி வேந்தரிடம் பட்டம் பெறாமல் துணை வேந்தரிடம் பட்டம் பெற்றது சட்ட விதிமீறல். ஆகவே மாணவி பட்டத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்று மனுதாரர் கூறியிருந்தார்.

மாணவிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், ''பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை மாணவி அவமதித்தது ஏற்புடையதல்ல. மாணவ, மாணவியர் பல்கலைக்கழகத்தின் மாண்பை காக்க வேண்டும்''என்று கண்டனம் தெரிவித்தனர். மேலும் பல்கலைக்கழக விதியில் ஆளுநரை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து மனுதாரர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ. 1,020 கோடிஊழல்..! அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணப் போவது உறுதி..! இபிஎஸ் சபதம்..!
நான் மட்டும் உழைத்தால் போதுமா? சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. திமுகவினருக்கு அதிரடி உத்தரவு!