கணவரை கொன்று சூட்கேஸில் ஒளித்து வைத்த மனைவி! மகளிடம் கூறிய அதிர்ச்சி வாக்குமூலம்!

Published : Nov 14, 2025, 08:57 PM IST
Chhattisgarh Crime

சுருக்கம்

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூரில், மனைவி ஒருவர் தனது கணவரைக் கொலை செய்து, சடலத்தை ஒரு டிராலி சூட்கேஸில் அடைத்துள்ளார். பின்னர், தனது மகளுக்கு தொலைபேசியில் அழைத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், மும்பைக்கு தப்பிச் சென்றுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில், கணவரைக் கொலை செய்த ஒரு பெண், அவரது சடலத்தை ஒரு டிராலி சூட்கேஸில் அடைத்து வைத்து, பின்னர் தனது திருமணமான மகளுக்கு போன் செய்து குற்றத்தை ஒப்புக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜஷ்பூரைச் சேர்ந்த சந்தோஷ் பகத் (43) என்பவரே கொல்லப்பட்டவர். இவரது மனைவி மங்கரீதா பகத் என்பவர்தான் இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மும்பையில் இருந்து ஊருக்குத் திரும்பிய மங்கரீதாவிற்கும், சந்தோஷிற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த மங்கரீதா, ஒரு இரும்புச் சுத்தியலால் கணவரைப் பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கணவரின் சடலத்தை ஒரு போர்வையால் சுற்றிய மங்கரீதா, பின்னர் அதை ஒரு சிவப்பு நிற டிராலி சூட்கேஸில் அடைத்து, வீட்டிற்குள் மறைத்து வைத்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, கோர்பாவில் வசிக்கும் தனது மகளுக்குத் தொலைபேசியில் அழைத்த மங்கரீதா, “உன் அப்பாவைக் கொலை செய்து, அவரது உடலை சூட்கேஸில் வைத்து வீட்டிற்குள் வைத்திருக்கிறேன்,” என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

சூட்கேஸில் சடலம்

தாயின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த மகள், தனது கணவருடன் உடனடியாக அங்கு சென்று, சந்தோஷின் சகோதரர் வினோத் மின்ஜுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், வீட்டிற்குள் இருந்த சூட்கேஸைக் கைப்பற்றினர்.

சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் சந்தோஷ் பகத்தின் சடலம் மீட்கப்பட்டது. அவரது முகத்திலும் கைகளிலும் பலத்த தாக்குதலுக்கான காயங்களும், இரத்தக் கறைகளும் இருந்தன.

தலைமறைவான மங்கரீதா

குற்றம் நடந்த பிறகு மங்கரீதா பகத் மீண்டும் மும்பைக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜஷ்பூர் எஸ்எஸ்பி சஷி மோகன் சிங் கூறுகையில், "கொல்லப்பட்டவரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மனைவியே கணவரைக் கொலை செய்துவிட்டு மகளுக்குத் தகவல் தெரிவித்தது தெரியவந்துள்ளது. அவர் மும்பைக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்பதால், அவரைக் கைது செய்யக் காவல்துறைக் குழு ஒன்று மும்பைக்கு விரைந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்திய பின்னரே கொலைக்கான உண்மையான நோக்கம் தெரியவரும்," என்று தெரிவித்தார்.

மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!