
கர்நாடகாவில் இருந்து 2023 ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை தமிழ்நாட்டுக்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரையும் கர்நாடகா வழங்கவில்லை. இதனால், காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் எல்லாம் உலர்ந்து போய்விடும் சூழல் உள்ளதால், தண்ணீரை திறந்து விடக் கோரினாலும், அதற்கு கர்நாக அரசு செவி மடுக்க மறுக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பாக விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இதனிடையே, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நிலுவை நீரை வழங்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவிரி ஆற்றில் இருந்து 10,000 கன அடி நீரை அம்மாநில அரசு திறந்து விட்டது. இதற்கு அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கர்நாடக பாஜகவினர் அம்மாநில விவசாயிகளுடன் சேர்ந்து பல்வேறு போரட்டங்களை நடத்தினர்.
கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே காவிரி நீர் பிரச்சினை நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி, கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு நீரை திறந்து விட வேண்டும்.
அந்த வகையில், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. தனது பரிந்துரைகளை வழங்குவதற்கு முன், இரு மாநிலங்களின் வாதங்களையும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் நேற்று கேட்டது. அப்போது, அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, ஆணையத்தின் கூட்டம் இன்றும் நடைபெற்றது.
நேற்றைய கூட்டத்தின்போது, தமிழ்நாடு தரப்பில் விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரப்பட்டது. ஆனால், நாளொன்றுக்கு 5000 கனஅடி தண்ணீர் வீதம் செப்டம்பர் 12ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்தது.
இருப்பினும், இந்த பரிந்துரையை ஏற்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க இயலாது எனவும், மழைப் பொழிவுக்கான வாய்ப்பும் குறைவாக உள்ளதால், தண்ணீர் திறந்து விட முடியாத சூழல் உள்ளதாகவும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் அனைத்து அணைகளிலும் போதுமான நீர் இருப்பு இல்லை; 47% அளவுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதால், குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், 3,000 கன அடி வரை தண்ணீர் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் தெரிவித்தது. ஆனால், இதனை ஏற்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் மறுத்து விட்டது.
இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், நம்முடைய நிலைப்பாடு தண்ணீர் திறப்பு 24,000 கன அடியாக இருக்க வேண்டும் என்பது. அப்போதுதான், பயிர்கள் கருகாமல் இருக்கும் என்றார். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு நிறைவேற்ற முடியாத ஒன்று. எனவே, நாங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என கர்நாடக அமைச்சர் எம்.பி.பாடீல் தெரிவித்துள்ளார்.