
உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபமும், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் காண தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். ஆனால் அடிக்கடி கடல் சீற்றம், கடல்நீர்மட்டம் தாழ்வு போன்றவற்றால் சுற்றுலா பயணிகளால் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
கன்னியாகுமரி கண்ணாடி பாலம்
இதனால் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையில் ரூ.37 கோடி செலவில் கடல் நடுவில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது. சுமார் 97 மீட்டர் நீளத்திலும், 10 அடி அகலத்திலும் கட்டப்பட்ட இந்த கண்ணாடி கூண்டு பாலத்தின் நடுப்பகுதியில் 2.4 மீட்டர் தடிமன் கொண்ட கண்னாடிகள் பதிக்கப்பட்டன. கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கண்ணாடி பாலத்தில் விரிசல்
இந்த பாலம் சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தில் நடந்து சென்று கடலின் அழகை ரசித்து வந்தனர். அந்த பாலத்தில் இருந்து பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். கடல் பாலத்தில் செல்ல கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், பாலத்தில் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
9 மாதத்தில் விரிசல் ஏற்பட்டது ஏன்?
அதாவது பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அந்த பகுதி தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. ஆனாலும் பாலத்தின் மேல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். ரூ.37 கோடி செலவில் பலத்த காற்று, கடல் சீற்றம், அதிக மக்கள் எடையை தாங்கும் வகையில் வலிமையாக அமைக்கப்பட்ட பாலத்தில் கட்டப்பட்ட 9 மாதத்தில் எப்படி விரிசல் ஏற்பட்டது? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இந்நிலையில், கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், ''கன்னியாகுமரி கண்ணாடி பாலம் உறுதியாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை. ஆகஸ்ட் 16ம் தேதி பாலத்தின் மேல் பகுதியில் பெயிண்ட் அடித்தபோது 7 மீட்டர் உயரத்தில் இருந்து 6வது கண்ணாடியில் சுத்தியல் தவறி விழுந்ததால் கண்ணாடியில் கீறல் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த கண்ணாடிக்கு பதில் புதிய கண்னாடி செய்ய ஒப்பந்ததாரர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டியது முதல் இப்போது வரை 1 லட்சம் பேர் அதில் நடந்து சென்றுள்ளனர். பாலம் எப்போதும் போல் வலிமையாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.