
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அவர் திருச்சி துறையூரில் பிரசாரம் மேற்கொண்டபோது அங்கு வந்த ஒரு ஆம்புலன்ஸை வழிமறித்த அதிமுக தொண்டர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும் தாக்கினார்கள். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. அதிமுகவினர் மனிதநேயமற்ற செயலில் ஈடுபடுவதாக பல்வேறு கட்சியினர் குற்றம்சாட்டினார்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய அதிமுகவினர்
அதே வேளையில் திமுகவினர் கூட்டத்தைக் கலைப்பதற்காக வேண்டுமென்றே நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை அனுப்புவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுவினர் 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், அதிமுகவினர் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தியதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
எடப்பாடி குற்றச்சாட்டுக்கு பதில்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 28.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டடத்தை உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ''இது அரசு நிகழ்ச்சி, நான் அதிகமாக அரசியல் பேச விரும்பவில்லை. அமைச்சர் அண்ணன் மா.சு அவர்கள், பேசும்போது, எதிர்க்கட்சித் தலைவர் (எடப்பாடி பழனிசாமி) குற்றச்சாட்டுக்கு எல்லாம் தெளிவாக பதில் கூறினார்.
ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தினார்கள்
உங்களுக்குத் தெரியும், எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருக்கின்றார். மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார். சமீப காலமாக பத்து நாட்களுக்கு முன்பாக என்ன நடந்தது என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அவர் ஒரு பொதுக் கூட்டத்தில் நடுரோட்டில் நின்று பேசிக் கொண்டிருக்கும்போது, அங்கு நோயாளிகளை ஏற்றிக் கொண்டு வந்திருந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல், அதற்கு என்னவெல்லாம் தடைகள் செய்ய முடியுமோ, அதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். அதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதிமுகவே ஆம்புலன்ஸில் செல்லும்
எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் தெரிவித்துக் கொள்வது, நீங்கள் இன்றைக்கு ஆம்புலன்ஸ் வண்டிகளை எல்லாம் நிறுத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உங்களுக்கு ஒன்று புரியவில்லை. உங்களுடைய கட்சியே, இயக்கமே விரைவில் ஆம்புலன்ஸ் வண்டியில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் ஐசியூ-வில் தான் உங்களுடைய இயக்கம் அனுமதிக்கப்படும் என்பதைத் தெரிவித்து, உங்களையும் காப்பாற்றுகின்ற இந்த பொறுப்பை நம்முடைய முதல்வர் (ஸ்டாலின்) செய்வார்கள் என்று நான் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.