
காஞ்சிபுரம் சட்டம் ஒழுங்கு டிஸ்பியாக இருந்து வருபவர் சங்கர் கணேஷ். ஒரு வன்கொடுமை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்காததால் அவரை கைது செய்ய காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது வாலாஜாபத்தில் ஒரு பேக்கரி கடையில் நடந்த மோதல் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சங்கர் கணேஷை கைது செய்து செப்டம்பர் 22ம் தேதி வரை சிரையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி
இதனைத் தொடர்ந்து நீதிமண்றத்திலேயே வைத்து போலீஸ் சீருடையில் இருந்த சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு சங்கர் கணேஷை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்த சக போலீசார் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்ற மறுத்து வழக்கறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் டிஎஸ்பி சங்கர் கணேஷ் நீதிபதியின் காரில் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சிறை வாசலில் இருந்து தப்பினார்
சிறை வாசல் அருகே நீதிபதியின் காரில் இருந்து இறங்கிய சங்கர் கணேஷ், போலீஸ் ஜீப்பில் ஏறி தப்பிச்சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றம் உத்தரவின்பேரில் கைதான டிஎஸ்பி சங்கர் கணேஷ் சிறை வாசலில் இருந்து தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறை வளாகம் மற்றும் காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தப்பி ஓடவில்லை; கழிவறைக்கு சென்றார்
இதனைத் தொட்ர்ந்து 30 நிமிடங்களுக்கு பின் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ், மீண்டும் கிளை சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சங்கர் கணேஷ் தப்பி ஓடவில்லை என்றும் கழிவறைக்கு சென்றதாகவும் போலீசார் விளக்கம் அளித்தனர். இந்த சம்பவத்தால் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.