காஞ்சிபுரம் தொகுதி பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில் பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாமக தருமரி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அரசாங்கம் என்பவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தருமபுரி பாமக வேட்பாளராக அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா ராமதாஸ் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர்: யார் இந்த வி.எஸ்.நந்தினி?
திண்டுக்கல் தொகுதியில் கவிஞர் ம.திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார், கடலூர் - இயக்குனர் தங்கர் பச்சான், மயிலாடுதுறை - ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார், தருமபுரி - சவுமியா அன்புமணி, சேலம் - ந.அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர், காஞ்சிபுரம் (தனி) - ஜோதி வெங்கடேசன் ஆகியோர் பாமக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இரு கட்சிகளுமே பாமகவின் கோரிக்கையான ராஜ்யசபா சீட் வழங்க ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் இழுபறி நீடித்து வந்தது. அதேசமயம், அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என ராமதாசும், பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என அன்புமணி ராமதாசும் விருப்பம் காட்டி வந்தனர். அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இறுதியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை பாமக உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.