விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர்: யார் இந்த வி.எஸ்.நந்தினி?

By Manikanda PrabuFirst Published Mar 22, 2024, 9:05 PM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலோடு சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும், காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும் மக்களவைத் தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் விஜயதாரணி. இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக சீட் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், அதிருப்தியில் இருந்த அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து விட்டார். தனது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்து விட்டார்.

இதையடுத்து, அவருக்கு கன்னியாகுமரி தொகுதியில் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் அந்த தொகுதி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. இதனால், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலாவது விஜயதாரணிக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியான பட்டியலில் விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக சார்பில்  நந்தினி என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் வி.எஸ்.நந்தினி பிபிஏ பட்டதாரி ஆவார். இவரது கணவர் சுரேஷ்குமார். இந்த தம்பதிக்கு நிரஞ்சன் (13) என்ற மகன் உள்ளார். நந்தினி ஏற்கனவே கட்சி மாவட்ட செயலாளர் பொறுப்பு, உட்பட பல்வேறு பொறுப்புகள் வகித்தவர். தற்பொழுது தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வகித்து வருகிறார்.

தோல்வி பயத்தில் பிரதமருக்குத்தான் தூக்கம் வரவில்லை: தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் ஸ்டாலின்!

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மேல்புறத்தில் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர் சந்தித்தார். அப்பொழுது பேசிய நந்தினி, தனக்கு போட்டியிட வாய்ப்பளித்த கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்தார்.  இது எனக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு நான் மக்களில் ஒருவராக இருந்து அவர்களுடைய பிரச்சினையை கேட்டு உரிய தீர்வு காண்பேன் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பிரதமர் மோடி அரசு பெண்களுக்கு பல்வேறு நல திட்டங்களை வழங்கி வருகிறது. 2013 ஆம் ஆண்டு முதல் நான் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறேன். மக்கள் பிரச்சனைகளுக்கு மக்களுடன் இருந்து பணியாற்றுவது என்னுடைய நோக்கம். ஏற்கனவே இருந்த எம்எல்ஏ விஜயதரணி திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததால் அவரால் தொகுதியில் திட்டங்களை கொண்டுவர முடியவில்லை. அவர் ஏற்கனவே என்ன வாக்குகளை கொடுத்தார் என்பது அறிந்து அந்த திட்டங்களை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன்.” என்றார்.

“தேர்தல் வியூகத்தை பொறுத்தவரையில் நாம்தான் வியூகத்தை வகுக்க . மக்களுடன் இணைந்து இருக்கும் பொழுது அவர் ளுடைய பிரச்சனையை அறிந்து அதற்கு தீர்வுகான நம்மால் முடியும். தொகுதியில் எனக்கும் எந்த கட்சிக்கு போட்டி என்பது தற்பொழுது கூற முடியாது. வேட்பாளர்களை பலகட்சிகள் இன்னும் அறிவிக்கவில்லை. வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகுதான் இதுகுறித்து கூற முடியும். மாவட்டத்தில் முக்கிய பிரச்சனையான கனிமவள கடத்தல், நெய்யாறு இடது கரை கால்வாய் பிரச்சனை, மீனவர்களுக்கான ஹெலிகாப்டர் தங்குதளம் போன்றவற்றை அமைக்க முயற்சி மேற்கொள்வேன்.”  எனவும் நந்தினி வாக்குறுதி அளித்தார்.

click me!